ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சபை வழங்கிய தரவுகளுக்கு அமைவாக, ஆப்கானிஸ்தான் மற்றும் மூன்று மத்திய ஆசிய குடியரசுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தகத்தின் அளவு நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் மத்திய ஆசியாவிற்கு 33 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதோடு இறக்குமதியானது 2 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது.
இந்த ஆண்டு மத்திய ஆசியாவில் இருந்து எங்களின் இறக்குமதிகள் 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகியுள்ளது என வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சபையின் தலைவர் முகமது யூனுஸ் முகமண்ட் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய வர்த்தகத்தின் அளவு பற்றிய சரியான புள்ளிவிவரத்தை அதிகாரிகள் வழங்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் கூட்டு வர்த்தக சபை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு 26 சதவீதம் குறைந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, துறைமுகங்களில் பொருட்கள், சேவைகளின் போக்குவரத்தில் சிக்கல்கள் உள்ளன.
இரண்டாவதாக, பாகிஸ்தானின் வங்கிகளின் ஊடான வர்த்தகத்தில் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வரும் வரையறைகள் ஆப்கானிஸ்தானுக்கான பொருட்களின் இறக்குமதியில் குறைவுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த இரண்டு காரணங்களையும் பாகிஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் நகிபுல்லா சாஃபி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மத்திய ஆசியா – தெற்காசியா வர்த்தகம் மற்றும் போக்குவரத்தின் காரணமாக, தலிபான் சுங்கவரிகளின் வருவாய் அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானின் இறக்குமதி அளவு வேலையின்மை, வறுமை மற்றும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக குறைந்துள்ளதாகவும் ஆப்கான் வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சபையின் மேலும் அதிகாரிகள் தெரிவித்தனர்.