தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாக குறிப்பிட்ட அமைச்சர் அதில் அதிகாரப் பகிர்வு குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என கூறினார்.
நல்லிணக்கம் மற்றும் வடக்கு, கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்கள் தொடர்பாக இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவரும் விடயம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பட்டது.
புதிய அரசியலமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதி வரைவை சமர்ப்பிக்கும் என பீரிஸ் தெரிவித்தார்.
இருப்பினும் இலங்கையின் சிங்கள பெரும்பான்மையினரிடமிருந்து போதுமான ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால் எந்த முடிவையும் செயற்படுத்த முடியாது என கூறினார்.
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் தலையீட்டைக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனவரி மாதம், கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சீனாவுடனான நாட்டின் உறவு குறித்தும் இந்திய ஊடகத்திற்கு ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் பணம் எம்மன குறைந்தமை காரணமாக நிதி அழுத்தத்திற்கு முகம் கொடுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இரு நாடுகளுக்கிடையிலான மின்சார இணைப்பு மற்றும் கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி குறித்தும் பேசப்பட்டதாக ஜி.எல்.பீரிஸ் கூறினார்.
மின்சாரம் கிடைக்குமாக இருந்தால் அது பாரியளவில் நன்மை பயக்கும் என்றும் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி இரண்டு, மூன்று மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.