இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவம் ஒரு புதிய விடயமல்ல என்றும் இது நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
எனவே உணர்ச்சிவசப்பட்டு இதுதொடர்பான விடயங்களை வெளியிடும்போது, குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்பட்டமை குறித்து நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இவ்வாறான மீனவர் அத்துமீறல் சம்வங்களுக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்தும் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.