பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
லாகூர் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணியும் பெஷாவர் சல்மி அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெஷாவர் சல்மி அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மசூத் 68 ஓட்டங்களையும் ரிஸ்வான் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் தலா 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெஷாவர் சல்மி அணியின் பந்துவீச்சில், சகீப் மொஹமுத், ரியாஸ் மற்றும் சல்மன் இர்சாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெஷாவர் சல்மி அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், முல்தான் சுல்தான்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சொயிப் மலிக் 44 ஓட்டங்களையும் லியம் லிவிங்ஸ்டன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முல்தான் சுல்தான்ஸ் அணியின் பந்துவீச்சில், பிளெஸிங் முஸரபானி மற்றும் குஸ்தில் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஷனாவாஸ் தானி 2 விக்கெட்டுகளையும் அப்பாஸ் அப்ரிடி மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 49 பந்துகளில் 1 சிக்ஸர் 8 பவுண்ரிகள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஷான் மசூத் தெரிவுசெய்யப்பட்டார்.