ஆப்கானிஸ்தான் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் நோர்வேக்கு விஜயம் செய்யும் தலிபான் பிரதிநிதிகளிடமும் தமது கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
அத்துடன் ஆப்கானில் கடந்த வாரம் காணாமல்போன இரண்டு பெண் ஆர்வலர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுத்தனர்.
ஒஸ்லோ கூட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வில் கலந்து கொண்ட தலிபான் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
கூட்டத்தில் பெண் உரிமைப் பிரதிநிதிகளில் ஒருவரான ஹோடா காமோஷ், கடந்த வாரம் காணாமல் போன இரண்டு பெண் ஆர்வலர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு ஆப்கானிஸ்தான் முழுவதும் தற்போதைய நிலைமைகளுக்கு உலகமே காரணம் என்றும் கூறினார்.
மற்றொரு ஆப்கானிஸ்தான் ஆர்வலர் மஹ்பூபா செராஜ், ‘இஸ்லாமிய எமிரேட் அவர்கள் கூட்டத்தில் வாக்குறுதியளிப்பதை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தொடர்ந்தால், எங்களது நம்பிக்கை முற்றிலும் உடைந்து விடும். நம்பிக்கை முற்றிலும் உடைகின்றபோது, ஆப்கானிஸ்தானின் முன்னாள் அரசாங்கத்திற்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் மீண்டும் நினைத்துப்பார்க்க வேண்டி ஏற்படும்’ என்றும் கூறினார்.
அத்துடன், ‘சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் பற்றிய தங்கள் சொந்த அக்கறைகளைப் பற்றி பேசினர் மற்றும் தலிபான்கள் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்’ என நஜிபா ஜலாலி வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரத்தில், காபூலில் பெண் ஆர்வலர்கள் காணாமல்போனமை குறித்து இஸ்லாமிய எமிரேட் விசாரணைகளை முன்னெடுக்கும் என்று அமீர் கான் முக்தாகி கூறினார்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக் குழுவின் தலைவர், உள்துறை அமைச்சர் செராஜுதீன் ஹக்கானியைச் சந்தித்து, ஆப்கானிஸ்தான் பெண் ஆர்வலர்களை கண்டறிவதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.
இதேநேரம், தலிபான்கள் நோர்வேயின் முன்முயற்சியை ஆப்கானிய அரசாங்கத்தை அங்கீகரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளாக வெளிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சந்திப்புகள் தலிபான்களின் சட்டபூர்வமான அங்கீகாரம் அல்ல என நோர்வே வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.