ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்பட்டதால், நடைபெறவில்லை.
ஆகையால் இன்று மீண்டும் பேச்சு வார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
போலந்தின் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தூதுக்குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக புடினின் உதவியாளரும் ரஷ்யாவின் தூதுக்குழுவின் தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி கூறியுள்ளார்.
முன்னதாக போரை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. முன்னதாக உக்ரைன் ஜனாதிபதியின் அலுவலகம், கலந்துரையாடலுக்கான உக்ரைனின் இலக்கு உடனடியான போர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்ய படைகளையும் திரும்பப் பெறுவது எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.