தென் கொரியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், பழமைவாத முன்னாள் உயர்மட்ட வழக்கறிஞரான யூன் சுக் யோல், வெற்றிபெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கடும் போட்டிக்கு மத்தியில் மக்கள் கட்சியின் யூன் சுக் யோல், 48.59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவருக்கு, கடும் போட்டியாக விளங்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்றார்.
நேற்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கே ஆரம்பமான வாக்குப்பதிவின் போது, கொரோனா பரவல் காரணமாக மக்கள் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றினர்.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாகவும், முந்தைய தேர்தல்களை விட அதிக அளவில் வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
இத்தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். சுமார் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் கட்சியைச் சேர்ந்த யூன் சுக் யோல், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தை மதிப்பதாகவும், நாட்டின் அடுத்த தலைவராக பதவியேற்கும் போது எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும், தன்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
மேலும், நாம் கைகோர்த்து மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் ஒன்றுபட வேண்டும் எனவும் எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.