புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகில் மேற்கு நைஜரில் பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று நடத்திய தாக்குதலில், இரண்டு பொலிஸார் உட்பட குறைந்தது 19பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (வியாழக்கிழமை) நைஜரின் தில்லாபெரி பிராந்தியத்தில் உள்ள பெட்டல்கோல் எல்லைக்கு அருகில் ஃபோனோ கிராமத்திற்கு அருகே மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜிஹாதிஸ்ட் குழுவொன்று பேருந்தை இடைமறித்து, பேருந்துக்கு தீ வைப்பதற்கு முன்பு பயணிகளை சுட்டுக் கொன்றதாக பயணிகள் போக்குவரத்து நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பேருந்து, புர்கினா பாசோவின் தலைநகர் ஓவாகடூகோவில் இருந்து நைஜர் தலைநகர் நியாமிக்கு சுமார் 30 பேருடன் பயணித்துக் கொண்டிருந்தது.
பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அத்துடன், சம்பவ இடத்தில் மேலும் இரண்டு லொரிகள் தீப்பிடித்து எரிந்தன.
தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இதேபோன்ற தாக்குதல்கள் அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு குழுவுடன் தொடர்புடைய ஜிஹாதி குழுக்களால் புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகில் உள்ள தில்லாபெரி பகுதியில் தொடர்ந்து நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.