பேரழிவை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும் என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு அடுத்தப்படியாக நாட்டின் அதிகாரத்துவம் மிக்க தலைவராக விளங்கும் அவரது சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.
அண்மையில் தென்கொரியாவில் உள்ள ஏவுகணை செலுத்தும் மையத்துக்கு சென்ற இராணுவ அமைச்சர் சூ ஊக், ‘தென்கொரியா மீது வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதற்கு திட்டம் எதுவும் வைத்திருந்தால், அந்த நாட்டின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கான திறனும், தயார் நிலையும் தென் கொரியாவுக்கு இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவை கடுமையாக எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், ‘அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டைப்பார்த்து, அழுக்கு நுரை போன்ற ஒருவர் முன் எச்சரிக்கை விடுப்பது விவேகம் இல்லாதது ஆகும். தென்கொரியா அதன் இராணுவ அமைச்சரின் பொறுப்பற்ற கருத்துகளுக்கு எதிராக ஒரு தீவிர அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும். பேரழிவை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
வட கொரிய ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியில், கிம் யோ ஜாங்தான் தென் கொரியா மற்றும் அமெரிக்கா தொடர்பான விஷயங்களில் பொறுப்பு அதிகார மையம் ஆவார்.