மோட்டோ ஜிபி பந்தயத்தின் போர்த்துகல் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது.
அந்த வகையில் ஆண்டின் ஐந்தாவது சுற்றான போர்த்துகல் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அல்கர்வ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.
இதில் 114.8 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 24 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.
இதில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ, பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 39.611 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, டுகார்டி அணியின் ஜோஹன் சர்கோ, 5.409 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.
இவரையடுத்து, அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ, 6.068 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஐந்து சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ ஒரு சம்பியன் பட்டத்துடன் 69 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
சூசுக்கி அணியின் அலெக்ஸ் ரின்ஸ், 69 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ ஒரு சம்பியன் பட்டத்துடன் 66 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ஆறாவது சுற்றான ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜெரீஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.