நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டதாலேயே ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரோஹினி கவிரத்ன நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சபையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பெண் உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் பரிந்துரைத்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் நியமனத்தை தாங்கள் அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான வாக்கெடுப்பு மீதான வாதப்பிரதிவாதங்கள் முழுவதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மௌனமாகவே காணப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்டன.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்தார்.
இதனையடுத்து, வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில், பணம் மற்றும் நேரத்தை வீணடிப்பதை விடுத்து, வாக்கெடுப்புக்கு செல்லாமல் ஒருவரை தெரிவு செய்யுமாறு எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்கும் கட்சிகளும் வலியுறுத்தின.
எவ்வாறிருப்பினும் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சபாநாயகர் தெரிவித்ததையடுத்து, தற்போது வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.