உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில் 6 ஆண்டுகளில் முதல் முறையாக வணிகரீதியான சர்வதேச விமான சேவை தொடங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பேரில், யேமன் அரசாங்கத்துக்கும் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே, கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட 60 நாட்கள் சண்டைநிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சனாவிலிருந்து ஜோர்தான், எகிப்துக்கு வாரத்துக்கு இரு வணிகரீதியிலான விமானங்களை இயக்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, முதல் விமானம் நேற்று (திங்கட்கிழமை) சனாவிலிருந்து புறப்பட்டு ஜோர்தான் தலைநகர் அம்மானை சென்றடைந்தது.
நாளை (புதன்கிழமை), மற்றொரு விமானம் சனாவிலிருந்து அம்மானுக்கு இயக்கப்படும் என யேமன் எயார்வேஸ் அறிவித்துள்ளது.
யேமனில் சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கும், ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. யேமன் அரசாங்கத்துக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான நாடுகள் செயற்பட்டு வருகின்றன.
தலைநகர் சனா, ஹூதி கிளர்ச்சிப் படையினர் வசம் உள்ள நிலையில், சவுதி தலைமையிலான கூட்டுப் படை தலைநகருக்கும் மற்ற பகுதிகளுக்குமான தொடர்பை தடுத்து வைத்துள்ளது. இதனால், சனாவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டு பெரும் பொருளாதார இழப்பு, பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. தொழில்களும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், வணிகரீதியான சர்வதேச விமான சேவையை யேமன் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையினை உலகநாடுகள் வரவேற்றுள்ளன.