ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவம் இல்லாத புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க தமது தரப்பினர் தயாராக உள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய காரணத்தினால்தான் 9 ஆம் திகதி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. அங்கு பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கான காணொளில் சமூக ஊடகங்களில் உள்ளன.
எமது நாடு இன்று முற்றாக சீரழிந்து விட்டது. இதனை நினைத்து நாமும் மிகுந்த வேதனையடைகிறோம். இரண்டு தரப்பினரும் இதற்காக வெட்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிழையானத் தீர்மானங்களே இதற்கெல்லாம் காரணமாகும். அவர் நிச்சயமாக இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்.
உற மாணிய விவகாரம், சர்வதேச நாணய நிதியத்திற்கு உரிய நேரத்தில் செல்லாதமை, 20 ஆவது திருத்தச்சட்டம் என அனைவரின் நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும்.
20 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவந்தபோது எதிர்க்கட்சிகளிடம் எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தப்படவில்லை.
ஜனாதிபதியின் கடந்த கால வழக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளினாலேயே இது கொண்டுவரப்பட்டது. நாம் இதன் ஒரு சரத்தைக்கூட காணவில்லை. இப்படி நிறைவேற்றப்பட்ட திருத்தச்சட்டத்தை நாம் எங்கும் காணவில்லை.
சபாநாயகரும் பொறுப்புக்கூறவேண்டும். யாரும் நாடாளுமன்றில் இல்லாத நேரம் பார்த்து, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, திருட்டுத்தனமாகத் தான் இதனை கொண்டுவந்தீர்கள். அலி சப்ரி போன்ற சிரேஷ்ட சட்டத்தரணி இவ்வாறானதொரு திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தமையிட்டு நாம் வெட்கமடைகிறோம்.
இதனால் இன்று நாடாளுமன்றுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லாது போயுள்ளது. பொலிஸ் – இராணுவத்தின் அதிகாரம் என அனைத்தும் ஜனாதிபதியின் கீழ் சென்றுள்ளது.
நல்லாட்சி காலத்தில் பொலிஸ் சுயாதீனமாக இருந்தபோது, அவர்கள் அனைத்து விடயங்களையும் அரசியல் தலையீடு இன்றியே மேற்கொண்டார்கள். இன்று இந்த அரசாங்கம் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் தோல்வியடைந்துவிட்டது. ஆனால் ஆட்சியாளர்கள் இன்னமும் ஆட்சியில்தான் இருந்துக்கொண்டிருக்கிறார்கள். இது வெட்கத்துக்குரியது.
நாம் புதிய அரசாங்கமொன்றுக்கு ஒத்துழைக்க தயாராகவே உள்ளோம். ஆனால் இன்று அமைந்துள்ளது புதிய அரசாங்கம் அல்ல. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான எந்தவொரு அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகள் கிடைக்காது. கிடைத்தாலும் சிறிய உதவியாகத் தான் இருக்கும்.
நாட்டையே சீர்குழைத்த அரசாங்கத்திற்கு தண்டனை என்ன? இந்த ஆட்சியாளர்கள் இல்லாத புதிய அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட்டால் மட்டும்தான் நாட்டை மீட்டெடுக்க முடியும். அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும்.
ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் அரசாங்கத்தை உருவாக்க நாம் தயாரில்லை. அப்படியான அரசாங்கத்தை சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.