எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு கிடைக்கும் இடங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு தகவல்கள் வழங்கும் வகையில் இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கமைய கையடக்கத்தொலைபேசி மூலம் நுகர்வோர், முகவர்கள் மற்றும் துணைமுகவர்கள் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரிசையில் நிற்பதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் திகதி மற்றும் எண்ணிக்கைகள் குறித்து அந்த பகுதி முகவர்களிடம் கேட்டு தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக எரிவாயு மற்றும் எரிபொருளினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.