அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவு இன்று(திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதுள்ள சுயாதீன ஆணையங்களுடன் கூடுதலாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் கொள்முதல் ஆணைக்குழு ஆகியன சுயாதீன ஆணைக்குழுக்களாக மாற்றப்படவுள்ளன.
தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் தெரிவு செய்யும் முன்மொழிவு அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
இதேவேளை, 21வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைக் குடியுரிமை காரணமாக பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்காமல் தடுப்பதும் இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.