இலங்கையில் சட்டஆட்சி, முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை 9 வயது சிறுமியின் கொலைச் சம்பவம் கண்ணூடாக காட்டியுள்ளதாக வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி குறித்த அமைப்பால் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “இலங்கையின் வடக்கு, கிழக்கில் செயற்பட்டுவரும் பல்வேறு பெண்கள் அமைப்புக்களைச் சார்ந்த நாங்கள் இலங்கையில் வன்முறைக்கும் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி இங்கு கூடியிருக்கிறோம். அண்மையில் அட்டுலுகமவை சார்ந்த 09 வயது சிறுமி மனிதத்தன்மையற்று கொலை செய்யப்பட்ட சம்பவமானது அனைத்து மக்களையும் முழு நாட்டையும் சிறுமிகளையும் பெண்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.
இவ்வாறான வன்முறைகளிலிருந்து பெண்களை காப்பாற்றுவது, பாதுகாப்பது சமூகத்தினதும் அரசினதும் கடமையாகும்.
இலங்கையில் சட்ட ஆட்சி, முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை சிறுமியின் கொலைச் சம்பவம் கண் ஊடாக காட்டி நிற்கின்றது.
இலங்கையில் சட்டங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தல் மற்றும் பாரபட்சமான போக்கு என்பன குற்றவாளிகளை தப்பிக்க வைத்து பாதுகாக்கப்படும் நடைமுறை காணப்படுகின்றது. இதனால் குற்றங்கள் தொடர்ந்தும் இடம் பெற்றுக்கொண்டே இருக்கின்றது. குற்றவாளிகளும் தப்பித்துக்கொண்டே இருகின்றனர்.
எனவே சட்டத்தரணிகள் நியாயத்தின் பக்கமே இணைய வேண்டும் எனக் கோருகின்றோம். மேலும் 09 வயது சிறுமியின் கொடூரமான கொலையின் உண்மைத் தன்மை வெளிக்கொணரப்பட வேண்டும். இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த வன்முறைகள் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றில் பல வருடங்களாக நிலுவையில் இருந்து வருகின்றன. எனவே நிலுவையில் உள்ள வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்” என கேட்டுக்ககொண்டனர்