உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
100 நாட்களைத் கடந்து நடந்துக்கொண்டிருக்கும் உக்ரைன்- ரஷ்யப் போர், தற்போது தீவிரமடைந்துள்ளது. ரஷ்யப் படைகள், உக்ரைன் படைகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருவதால் உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை கோரியுள்ளது.
இந்தநிலையில், இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறுகையில், ‘உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. அந்த ஆயுதங்களில் புதிதாக ஒன்றும் இல்லை. அவை ரஷ்யாவிடம் உள்ள ஆயுதங்களுக்கு நிகரானவைதான்.
உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், உக்ரைனில் இதுவரை தாக்கப்படாத இடங்களை குறிவைத்துதாக்குவோம்’ என கூறினார்.
எனினும், எந்தப் பகுதி மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதை புடின் தெரிவிக்கவில்லை. உக்ரைனுக்கு ஹிமார்ஸ் மல்டிபிள் லொஞ்ச்ராக்கெட் அமைப்புகளை வழங்கப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் புடின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.