இராணுவத்தால் ஆளப்படும் மியான்மரில், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பருக்கு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
ஷா மியூட் மவுங், சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் இரண்டாவது துணைத் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆவார்.
கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி கைது செய்யப்பட்டு மாண்டலேயின் ஓபோ சிறையில் அடைக்கப்பட்ட ஷா மியூட் மவுங் மீதான விசாரணை மூடிய அறைகளில் நடைபெற்றது.
இதன்போது, ஷா மியூட் மவுங், ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
இரத்தப் புற்றுநோயால் அவதிப்படும், ஷா மியூட் மவுங், லஞ்சம் பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் முதலமைச்சராக தனது பதவியை தவறாகப் பயன்படுத்தினார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக சட்ட அதிகாரி கூறினார்.
ஷா மியூட் மவுங், ஏற்கனவே கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறுதல், தேசத்துரோகம் மற்றும் தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்,
மேலும் மற்றொரு தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட உள்ளார்.
மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்த்தது.
அத்துடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.