போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளிகள் தொடர்பான உண்மைகளை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், தடுப்பு உத்தியாக வானத்தை நோக்கியும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையும் பிரதான வாயிலின் பக்கவாட்டு சுவரிலும் பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் போராட்டக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விடயம் தொடர்பாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சனிக்கிழமை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவப் படையினர் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பரவி வரும் காணொளிகள் பல தொடர்பில் இலங்கை இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியான இந்த சமூக ஊடகச் செய்திகளை இராணுவம் கடுமையாக நிராகரிக்கிறது. மேலும் போராட்டக்காரர்கள் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக இராணுவம் வான் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையும் பிரதான வாயிலின் பக்கவாட்டு சுவரில் பல தடவைகள் சுட வேண்டியிருந்தது.
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதும் வாயில்களின் பக்கவாட்டுச் சுவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் ஒரு தடுப்பு உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது. இது போராட்டக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல” என இராணுவம் தெரிவித்துள்ளது.