சுதந்திரமான, இறையாண்மை கொண்ட சொந்த நாட்டில் வசிப்பதற்கு பாலஸ்தீன மக்கள் தகுதியானவர்கள்தான் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பைடன், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பெத்லஹேமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கையை அமெரிக்கா கைவிடப் போவதில்லை என பைடன் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, இஸ்ரேலிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்த ஜோ பைடனுக்கு ஜெட்டா நகரில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், உற்சாக வரவேற்பளித்தார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த சந்திப்பின் போது கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் முகமது பின் சல்மான் மற்றும் ஜோ பைடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.