எதிர்வரும் ஆசியக் கிரிக்கெட் கிண்ண தொடரை சொந்த மண்ணில் வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எழுச்சி போராட்டங்களால் இந்த தொடரை பாதுகாப்பாக நடத்துவது குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோஹான் டி சில்வா கூறுகையில்,
‘எங்களை பொறுத்தவரை இலங்கையில் ஆசியக் கிரிக்கெட் கிண்ண தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்று இன்னும் உறுதியாக நம்புகிறோம். சமீபத்தில் அவுஸ்ரேலிய அணி இங்கு வந்து 2 டெஸ்டில் விளையாடியது.
இப்போது பாகிஸ்தான் அணி வந்துள்ளது. ஆசியக் கிரிக்கெட் கிண்ண தொடரை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் சபையிடம் இருந்து எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை’ என கூறினார்.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிரிக்கெட் கிண்ண தொடர், இலங்கையில் அடுத்த மாதம் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 11ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.