பிரித்தானியாவில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெறும் போட்டி தொடர்பாக கட்சி உறுப்பினர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முன்னிலை பெற்றுள்ளார்.
கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கும் 2 போட்டியாளர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கவிருக்கும் கட்சி உறுப்பினர்களிடையே ஜேஎல் பார்ட்னர்ஸ் ஆய்வு நிறுவனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துக் கணிப்பு நடத்தியது.
நாடு முழுவதுமுள்ள 4,400க்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், புதிய பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக்குக்கு கருத்துக் கணிப்பில் பங்கேற்ற ஏறத்தாழ பாதி பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் சிறப்பாக செயற்படுவார் என்று 48 சதவீதம் பேர் பதிலளித்தனர். அவருக்கு அடுத்தபடியாக, வெளியுறவுத் துறை லிஸ் ட்ரஸ்ஸுக்கு அதிக கட்சி வாக்காளர்கள் ஆதரவு அளித்திருந்தனர்
பிரதமர் பதவிப் போட்டு தொடர்பான கருத்துக் கணிப்பில் அவருக்கு தற்போதுதான் முதல்முறையாக 2ஆவது இடம் கிடைத்துள்ளது. அவர் அடுத்த பிரதமர் ஆவதற்கு, கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்தக் கருத்துக் கணிப்பில் வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். நாட்டின் புதிய பிரதமராக அவர் பொறுப்பேற்பதற்கு 33 சதவீத கட்சி வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.