புதிய அமைச்சரவை எதிர்வரும் சில நாட்களுக்குள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் எதிர்கட்சியில் உள்ளவர்கள் பிரதமர் பதவியினை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தால், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
அத்துடன், 20 முதல் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை எதிர்வரும் சில நாட்களுக்குள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகளவான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
தமக்கு எதிராக போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரையும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.