மியன்மாரில் சமூக செயற்பாட்டாளர், முன்னாள் நாடாளுமன்ற உள்ளிட்ட நால்வருக்கு ஆளும் இராணுவம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
மியன்மாரில் ஆங் சான் சூக்கி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஆட்சியில் உள்ள இராணுவத்தினர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த மரணத் தண்டனையை ஆங் சான் சூச்சியின் ஜனநாயகக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியோ ஸெயா தா, ஜனநாயக செயற்பாட்டாளர் கியாவ் மின் யு, ஹியா மயோ ஆங், ஆங் துரா ஜா ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது, கொரில்லா தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட வழக்குகள் இவர்கள் மீது இருந்தன என்று அரச பத்திரிகையான ‘மிரர் டெய்லி’யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை இராணுவ அரசாங்கமும் உறுதிப்படுத்தியது. ஆனால், இவர்கள் எப்போது தூக்கிலிடப்பட்டனர் என்கிற விபரம் தெரிவிக்கப்படவில்லை.
இவர்கள் 4 பேருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியிருந்தன. ஆசியான் அமைப்புக்கு தற்போதைய தலைவர் என்கிற முறையில் கம்போடியாவும் வலியுறுத்தியிருந்தது. ஆனால், அரசியல் கைதிகள் 4 நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மியன்மார் நாட்டுச் சட்டப்படி மரண தண்டனைக்கு அரசின் தலைவர் ஒப்புதல் அளிப்பது அவசியம். இதற்கு முன்னதாக 1976இல் மாணவர் தலைவர் சலாய் டின் மௌங், அப்போதைய இராணுவ ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்பட்டார்.
இந்த நிலையில், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நால்வரின் குடும்பத்தினரும் தகவல் அறிந்து சிறைக்கு வெளியே கூடியிருந்ததால் அங்கு பதற்றம் நிலவியது. குடும்பத்தினருக்கு தகவல் ஏதும் அளிக்காமல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய மியன்மார் இராணுவத்தை அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.