அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழு தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில், சீனா இராணுவம் மீண்டும் தாய்வான் தீவைச் சுற்றிலும் போர்ப் பயிற்சியை தொடங்கியுள்ளது.
தாய்வான் தீவைச் சுற்றிலும் போரில் ஈடுபடுவதற்கான தங்களது பல்வேறு படைகளின் தயார் நிலையை உறுதி செய்துகொள்வதற்காக இந்தப் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக சீன இராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஷீ யீ தெரிவித்தார்.
மேலும், தாய்வான் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் குலைப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற போர்ப் பயிற்சிதான் தற்காப்பு நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
தாய்வான் நீர்ச்சந்தியின் அமைதியையும் சீனாவின் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்வோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, போர் பயிச்சிகளையும் மேற்கொண்டது.
சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தனி நாடாக செயற்பட்டு வரும் தாய்வான் தீவை தங்கள் நாட்டின் ஓர் அங்கமாக (பிராந்தியமாக) சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆகையால், தாய்வானுக்கு எந்த நாட்டின் தலைவரும் அலுவல்பூர்வமாக செல்வதை சீனா எதிர்த்து வருகிறது.