இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படக்கூடும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச வருமானத்தை 11.3 சதவீதமாக அதிகரிப்பது உட்பட நான்கு முக்கிய விடயங்களை இலக்காகக் கொண்டு 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால கால வரவு செலவுத் திட்டத்தின் கட்டமைப்பிற்குள் எட்டப்படவுள்ள எதிர்பார்க்கப்படும் அரச நிதி இலக்குகளின் அடிப்படையில் அரசாங்கம் இந்தப் புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதமாகவுள்ள அரச வருமானத்தை 11.3 சதவீதமாக உயர்த்தவும், 18.9 சதவீதமாக இருக்கும் அரச செலவினத்தை 18.1 சதவீதமாகவும்,
முதன்மை வரவு செலவுத் தொகையை – 4 சதவீதத்திலிருந்து – 1 சதவீதமாக ஆகவும் குறைக்கவும் மற்றும் – 9.9 சதவீதத்திலிருந்து மைனஸ் – 6.8 சதவீதமாக வரவு செலவுத் திட்ட இடைவெளியைக் குறைத்தல் போன்ற இலக்குகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவு மூலம் பூர்த்தி செய்து கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்காக பூச்சிய அடிப்படையிலான வரவு – செலவு திட்டத்தை தயாரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.