முன்னாள் சோவியத் ஒன்றிய ஜனாதிபதி மிகயீல் கோர்பசேவின் உடலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஜனாதிபதியும் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தவருமான மிகயீல் கோர்பசேவ், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது 91ஆவது வயதில் காலமானார்.
இது குறித்து ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘மாஸ்கோ மருத்துவமனைக்குச் சென்று மிகயீல் கோர்பசேவின் உடலுக்கு ஜனாதிபதி புடின் அஞ்சலி செலுத்தினார்.
எனினும், கலினின்கார்ட் பகுதிக்கு அவர் அரசு முறைப் பயணம் மேற்கொள்வதால், சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோர்பசேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் புடினால் பங்கேற்க முடியாத நிலை உள்ளது’ என கூறினார்.
சேவியத் ஒன்றியத்தின் ஆட்சியாளராக கடந்த 1988ஆம் ஆண்டு முதல் 1991ஆம் வரை பொறுப்பு வகித்த அவர், பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவதற்காக சர்வதேச அளவில் போற்றப்பட்டாலும், மிகவும் சக்திவாய்ந்ததாக விளங்கிய சோவியத் ஒன்றியம் சிதறியதற்குக் காரணமாக இருந்தவர் என்று ரஷ்யாவில் விமர்சிக்கப்பட்டு வந்தார்.
எனினும், கடந்த 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் உலக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று வரலாற்று அறிஞர்கள் கோர்பசேவைக் குறிப்பிடுகின்றனர்.
1991 ஒகஸ்டில் அவருக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியால் அவரது அதிகாரம் குறையத் தொடங்கியது. குடியரசு சுதந்திரம் அறிவித்த பிறகு டிசம்பர் 25. 1991இல் இராஜிநாமா செய்யும் வரை குடியரசைக் கவனித்துக் கொண்டே கடைசி மாதங்களைக் கடந்தார்.
பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக கோர்பசேவுக்கு கடந்த 1990-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.