கிளைபோசேட் களைக்கொல்லிகளுக்கு தடை விதித்து விதிக்கப்பட்ட உத்தரவை நீக்கும் வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விவசாய அமைச்சர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நுகர்வோர் சேவை அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கிளைபோசேட் என்ற களைக்கொல்லியை தடைசெய்து 2017ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளைபோசேட் பாவனையால் நீர் ஆதாரங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும் மண் மற்றும் தாவரங்களுக்கு பெரும் கேடு ஏற்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் மனித ஆரோக்கியமும் பாரியளவில் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், களைக்கொல்லி பாவனையால் மீன் மற்றும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக கிளைபோசேட் மீதான தடையை நீக்கியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், தடையை நீக்கும் உத்தரவை செல்லாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.