யாழ்.மாநகர சபை எல்லைக்குள் திலீபனின் நினைவுத்தூபி வருகிறது. அதனால் மாநகர சபையை நிர்வகிக்கும் மணிவண்ணன் அணியானது திலீபனின் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்குரிய ஏற்பாட்டுக்களை ஒருபுறம் செய்யத் தொடங்கியது. இன்னொரு புறம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறு ஏற்பாடுகளை செய்ய தொடங்கியது.அக்கட்சியானது வடக்கையும் கிழக்கையும் இணைத்து பொத்துவிலில் இருந்து திலீபனின் நினைவிடம் வரையிலும் ஒரு நினைவூர்தியைக் கொண்டு வருகின்றது. இந்த இரண்டு தரப்பும் இதுதொடர்பில் முரண்படப் போவதை முன்கூட்டியே அனுமானித்த அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் இதுவிடயத்தில் தலையீடு செய்ய முற்பட்டார்கள்.இந்த இரண்டு கட்சிகளையும் சாராதவரும் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரும் ஆகிய பஷீர் காக்கா இதுவிடயத்தில் தலையிட்டு முரண்பாடுகளுக்கு அப்பால் திலீபனை நினைவு கூருமாறு வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அவருடைய தலையீடானது கஜன் அணிக்கும் அவருக்குமிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது.
நினைவுகூர்தல் தொடர்பான விடயங்களில் ஒரு மூத்த அரசியல் செயற்பாட்டாளராக பஷீர் காக்கா இதற்கு முன்னரும் தலையீடு செய்திருக்கிறார்.இதற்கு முன்னரும் அவர் ஊடகச் சந்திப்புகளை நடத்தியிருக்கிறார். அறிக்கைகளை விட்டிருக்கிறார்.சில ஆண்டுகளுக்கு முன் யாழ். ஊடக அமையத்தில் சைக்கிளில் வந்து ஊடகச் சந்திப்பை நடாத்திய ஓர் ஆள் அவர் என்று ஒரு ஊடகவியலாளர் சொன்னார். ஆனால் அவை எவையுமே எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை.மாறாக கட்சிகள் அவரோடு முரண்படும் ஒரு நிலைமைதான் ஏற்பட்டது. இம்முறை திலீபன் நினைவு நாளிலும் அதுதான் நடந்திருக்கிறது.
மாநகர சபை எல்லைக்குள் திலீபனின் நினைவுத்தூபி அமைந்திருப்பதனால் நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்தும் உரிமை மாநகர சபையை நிர்வகிக்கும் கட்சிக்கு உண்டு என்ற வாதத்தை பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் செயற்பாட்டாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.அதன் பொருள் அவர்கள் மணிவண்ணன் அணியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதல்ல.மாறாக இப்பொழுது மணிவண்ணன் முதல்வராக இருக்கிறார். நாளை வேறொரு கட்சியை சேர்ந்தவர் முதல்வராக வரலாம். அவர் திலீபனின் நினைவு கூர்தலை ஏற்றுக் கொள்ளாமல் விடலாம். எனவே மாநகர சபை ஆட்சியை யார் கைப்பற்றுகிறார்கள் என்பதை பொறுத்து நினைவு கூர்தல் தொடர்பான முடிவுகளும் மாற்றம் அடையலாம் என்பதனால் அதை மாநகர சபை நிர்வாகத்திற்கு வெளியே ஒரு பொதுக் கட்டமைப்பின் மூலம் நிர்வாகிப்பதே சரி என்று பெரும்பாலான அரசியல் செயற்பாட்டாளர்கள் நம்புகின்றார்கள். இது கடந்த சனிக்கிழமை – நேற்று -பிற்பகல் யாழ் நாவலர் மண்டபத்தில் நடந்த சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அச்சந்திப்பினை யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் ஒழுங்கு படுத்தியிருந்தார்.அப்படி ஒரு சந்திப்பை திலீபனின் நினைவு நாட்கள் தொடங்க முன்பே ஒழுங்கு செய்திருந்தால் விளைவு வேறு விதமாக அமைந்திருக்கலாம்.ஆனால் நினைவு நாள் தொடங்கிய பின் குறிப்பாக அது தொடர்பான மோதல்கள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கிய பின் அப்படி ஒரு சந்திப்பை ஒழுங்கு படுத்தியமை என்பது மிகவும் பிந்தி விட்டது மட்டுமல்ல, அது தமிழ் அரசியலின் இயலாமையையும் காட்டுகின்றது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் மதத்தலைவர்களுக்கும் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டதாக மாநகர சபை முதல்வர் கூறுகிறார்.எனினும் சுமார் 30 பேர்கள் வரை பங்குபற்றிய அக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் காணமுடியவில்லை.இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதிநிதிகளை அனுப்பியிருந்தார்கள். மதத்தலைவர்கள் வந்திருக்கவில்லை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான இயக்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருகிறது.அந்த அறிக்கை கஜன் அணியை விமர்சிப்பதாகக் காணப்படுகிறது.
அச்சந்திப்பில் கலந்து கொண்ட பஷீர் காக்கா, யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவரான பேராசிரியர் கணேசலிங்கம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவராகிய ஐங்கரனேசன் முதலாய் அனேகமானவர்கள் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்புக்குள் கட்சிகளை உள்ளீர்க்க வேண்டாம் என்றும் கேட்டிருக்கிறார்கள்.கட்சிகளுக்கு அப்பால் கட்சி சாரா நபர்களைக் கொண்ட ஒரு பொதுக் குழுவை உருவாக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.மேற்படி சந்திப்பின் முடிவில் 7 பேர்களைக் கொண்ட ஒரு பொதுக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.இக்குழு சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புடனும் உரையாடி நினைவு கூர்தல் தொடர்பான பொது ஏற்பாட்டுகளைச் செய்யும் என்று கூறப்படுகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட உடைவு இந்த நினைவு கூர்தல் விவகாரத்தில் பிரதிபலிப்பதை தவிர்க்குமாறு எல்லா அரசியல் செயற்பாட்டாளர்களும் கேட்கின்றார்கள்.ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று தெரிகிறது. ஏனெனில் கஜன் அணி பொதுவாக ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்கு தயார் இல்லை. நினைவு கூர்தலில் மட்டும் அல்ல அதற்குமப்பால் ஏனைய அரசியல் செயற்பாடுகளிலும் அவர்கள் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படத் தயார் இல்லை. கடந்த ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியதன் பின்னிருந்து இதுதான் நிலைமை. அதற்குப் பின் நிகழ்ந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் எந்த ஒரு முயற்சியிலும் கஜேந்திரகுமார் அணி பங்கு பற்றுவதில்லை.அவர்கள் பெருமளவுக்கு தனித்துச் செயல்படத் தொடங்கி விட்டார்கள்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னிருந்து கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் சிவில் சமூகங்களும் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. இக்காலப் பகுதிக்குள் நிகழ்ந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் எவற்றிலும் அனேகமாக சிவில் சமூகங்கள் ஈடுபடவில்லை. கட்சிகள்தான் ஈடுபட்டன. குறிப்பாக டெலோ அமைப்பின் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் விளைவாக ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. அது இப்பொழுதும் செயல்படுகின்றது.
இதுதவிர கடந்த யூலை மாதம் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் முன்முயற்சியால் ஒரு மெய்நீகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.தமிழ் சிவில் சமூக அமையும் உட்பட பல்வேறு சிவில் அமைப்புகளும் இதில் ஒன்றிணைந்து செயல்பட்டன. தமிழ்ப் பரப்பில் இரண்டு கஜன்கள் மீதும் ஒப்பிட்டளவில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரே குடிமக்கள் அமைப்பு தமிழ் சிவில் சமூக அமையந்தான். கட்சிகளை ஒருங்கிணைக்கும் கூட்டங்களில் இரண்டு கஜன்களையும் உள்ளே கொண்டு வருவதும் பெரும்பாலும் தமிழ் சிவில் சமூக அமையம்தான்.ஆனால் கடந்த யூலை மாதம் நிகழ்ந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் சந்திப்பில் இரண்டு கஜன்களையும் அழைத்துக் கொண்டு வர தமிழ் சிவில் சமூக அமையத்தாலும் முடியவில்லை.
அதாவது கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் கஜேந்திரகுமாரை உள்ளே கொண்டு வரக்கூடிய சக்திமிக்கதாக காணப்பட்ட ஒரு சிவில் சமூகத்தாலும்கூட அதைச் செய்ய முடியவில்லை. எனவே இனி மேல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் கஜேந்திரகுமாரை உள்ளே கொண்டு வரும் சாத்தியம் இல்லை. குறிப்பாக மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட உடைவானது இனிமேல் எந்தவோர் ஒருங்கிணைப்பு முயற்சியிலும் இரண்டு கஜன்களையும் இணைப்பதை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.இனிமேல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் யார் ஈடுபட்டாலும் இரண்டு கஜன்களையும் உள்ளே கொண்டு வர முடியாது என்பதே தமிழ் அரசியலில் ஆகப்பிந்திய யதார்த்தம் ஆகும்.
இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில் திலீபனை நினைவு கூர்வதில் மட்டுமல்ல ஏனைய நினைவு கூர்தல்களின் போதும் அந்தக் கட்சி வெளியேதான் நிற்கப் போகிறது.ஜெனிவாவை நோக்கியும் அந்தக் கட்சி எந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குள்ளும் இணையாது.எனவே இம்முறை திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ் கட்சிகள் ஐக்கியப்படும் வாய்ப்புகள் இல்லை.
ராஜபக்சக்களின் ஆட்சியின் போது நினைவு கூர்தலுக்கு தடை இருந்தது.அந்தத் தடை கட்சிகளை ஒன்றிணைத்தது.அப்பொழுது,தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒன்றாகத் திரண்டு சாவகச்சேரியில் திலீபனை நினைவு கூர்ந்தன.ஆனால்,ரணில் விக்கிரமசிங்க நினைவு கூர்தலைத் தடுக்கவில்லை. தடையற்ற சூழலில் தமிழ் கட்சிகள் நினைவு கூரும் களத்தை மோதல்களமாக மாற்றப் போகின்றனவா?அப்படியென்றால் ஒடுக்குமுறைதான் தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டுமா?