வட கொரியா பியோங்யாங் பகுதியில் இருந்து நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.
ஜப்பானின் என்.எச்.கே. தேசிய தொலைக்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்ட செய்தியில், வட கொரியாவிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே இருந்தாலும் ஜப்பான் கடலில் அது தரையிறங்கியதாகவும் கூறியுள்ளது.
சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6:47 மணிக்கு வட கொரியாவில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக ஜப்பானிய கடலோரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இரண்டாவது அறிக்கையில், மற்றொரு வெளிப்படையான பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக கடலோர காவல்படை கூறியது.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அலுவலகம், சமீபத்திய ஏவுகணை ஏவுதல் ஆய்வு செய்யப்பட்டு, மக்கள், விமானம் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பிற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாக ட்வீட் செய்துள்ளது.
வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மாதம் வரை 30க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.