கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று (புதன்கிழமை) பிற்பகல் கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தை நடத்துவதற்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய பிரிவு இரண்டிற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே..என்.தில்ருக்கின் கையொப்பத்துடன் இது தொடர்பான கடிதம் போராட்டத்தை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின் காலம் கோட்டை பிரதேச மக்கள் அதிகளவில் கூடும் காலப்பகுதி எனவும் போராட்டம் காரணமாக கோட்டை மற்றும் ஜெயா பகுதிகளில் மொத்த வியாபார நடவடிக்கைகளும் தடைபடலாம் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 80வது பிரிவின்படி, ஒலிபெருக்கி அல்லது இயந்திர ஒலி உற்பத்தி சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் போராட்டத்தின் போது அத்தகைய அனுமதி பெறப்படவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி மறியல் அல்லது இடையூறுகள் ஏற்பட்டால் பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்கனவே உள்ள பிற சட்டங்களின் கீழ் போராட்டக்காரர்களை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலந்துகொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் விடுத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.