சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்து சென்ற குழுவினரின் படகு விபத்துக்குள்ளானதையடுத்து, அதில் இருந்த 300 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இந்த படகில் விபத்தில் சிக்கிய இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படையை தொடர்புகொண்டு தானும் தனது குழுவினரும் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரியுள்ளது.
இதனையடுத்து, படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
விபத்தின்போது இலங்கையர் ஒருவரே படகில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், படகு வியட்நாமில் தரையிறங்கிய பின்னர், ஏனையவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.