உக்ரைனில் நடந்த போருக்காக ரஷ்யாவிற்கு இரகசியமாக ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்கா கூறியதை வட கொரியா நிராகரித்துள்ளது.
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கவில்லை என்றும் அவ்வாறு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.
வட கொரியா ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பீரங்கி குண்டுகளை வழங்குவதாக அமெரிக்காவிடம் தகவல் இருப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கடந்த வாரம் கூறியதை அடுத்து, அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ.இன் இந்த அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வந்துள்ளது.
வட கொரியா மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளில் உள்ள நாடுகளின் வழியாக அனுப்புவதன் மூலம் ஏற்றுமதிகளை இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதாகவும், ஏற்றுமதிகள் பெறப்பட்டதா என்பதை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் ஜோன் கிர்பி கூறினார்.
வட கொரிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டுகளை வதந்தி என்றும், வடகொரியாவிற்கு ரஷ்யாவுடன் ஆயுத பரிவர்த்தனைகள் இருந்ததில்லை என்றும் எதிர்காலத்தில் அவ்வாறு செய்யும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.
அமெரிக்காவின் இத்தகைய நகர்வுகள் வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபையில் சட்டவிரோதமான தடைகள் தீர்மானத்தை செயற்படுத்துவதன் மூலம் சர்வதேச அரங்கில் வடகொரியாவின் மதிப்பைக் கெடுக்கும் அதன் விரோத முயற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் கருதுகிறோம் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
வட கொரியா கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட தொடர்ச்சியான ஆயுத சோதனைகளை நடத்தியதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவும் தென் கொரியாவும் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய விமானப்படை பயிற்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.