எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடரில், மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளன.
தற்போது நடைபெற்றுவரும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் 12 அணிகளே பங்கேற்றிருந்த நிலையில், தற்போது நடைபெற்றுவரும் தொடரில் விளையாடிய 8 அணிகள் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
நடைபெற்றுவரும் தொடரில், சுப்பர்-12 சுற்றில் இரு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. அதன்படி குழு- 1 பிரிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, இலங்கை ஆகிய அணிகளும் குழு-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே நெதர்லாந்து அணி நேரடியாக தகுதி பெற்றிருப்பது முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
தொடரை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகளும் அமெரிக்காவும் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறுகின்றன. இந்த 10 அணிகளுடன் ஐ.சி.சி. தரவரிசையில் மேலே உள்ள பங்களாதேஷூம் ஆப்கானிஸ்தானும் நேரடியாகத் தகுதி பெறுகின்றன.
12 அணிகள் இதுபோல நேரடியாகத் தேர்வாகிவிட்ட நிலையில் மீதமுள்ள 8 அணிகளும் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. இந்தமுறை சுப்பர்-12 சுற்றில் விளையாடிய அயர்லாந்து, சிம்பாப்வே ஆகிய அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி அதன் வழியாகவே உலகக் கிண்ணத் தொடருக்குள் நுழைய முடியும்.