கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் கோஸ்டா ரிக்கா, மொராக்கோ மற்றும் குரேஷியா அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
குழு இ பிரிவில் நடைபெற்ற போட்டியில், கோஸ்டா ரிக்கா அணியும் ஜப்பான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கோஸ்டா ரிக்கா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
கோஸ்டா ரிக்கா அணி சார்பில், கெய்ஸர் புல்லர் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் அணிக்கான வெற்றி கோலை புகுத்தினார்.
குழு எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில், தரநிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணியும் மொராக்கோ அணியும் பலப்பரீட்சை நடத்தின.
அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மொராக்கோ அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வரலாற்று வெற்றியை பெற்றது.
மொராக்கோ அணி சார்பில், ரோமெய்ன் சைஸ் 73ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஸகாரியா அபுக்லால் 92ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
இந்த தோல்வியினால் விரக்தியடைந்த பெல்ஜிய கால்பந்து இரசிகர்கள், பிரஸ்ஸல்ஸின் மையத்தில் அமைதியின்மையில் ஈடுபட்டனர்.
இதனை சமாளிக்க பொலிஸார், நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
டஸன் கணக்கான கால்பந்து இரசிகர்கள், வீதி வழியே இருந்த கடை ஜன்னல்களை அடித்து நொறுக்கினர், பட்டாசுகளை வீசினர் மற்றும் வாகனங்களை எரித்தனர்.
இந்த வன்முறை சம்பவங்களின் போது, 11பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
குழு எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில், குரேஷியா அணி மற்றும் கனடா அணிகள் மோதின.
கலீபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், குரேஷியா அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
குரேஷியா அணி சார்பில், ஆண்ட்ரேஜ் கிராமரிக் 36ஆவது மற்றும் 76ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். மார்க்கோ லிவாஜா 44ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், லவ்ரோ மேஜர் 94ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
கனடா அணி சார்பில், அல்போன்சா டேவிஸ் போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
குழு இ பிரிவில் நடைபெற்ற போட்டியில், ஸ்பெயின் அணியும் ஜேர்மனி அணியும் பலப்பரீட்சை நடத்தின.
அல்பய்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதில் ஸ்பெயின் அணி சார்பில், அல்வாரோ மொராட்டா போட்டியின் 62ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.
நிக்லாஸ் நிக்லாஸ் ஃபுல்க்ரக் போட்டியின் 83 ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.