இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனமானது, (ஐ.ஓ.சி) எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடந்து வரும் காலநிலை மாற்றம்-27 உச்சிமாநாட்டின் போது உயிரி எரிபொருள்கள், நிலையான சூரிய ஒளி அடிப்படையிலான சமையல், கார்பன்-திறனுள்ள சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆற்றல் மாற்றத்திற்கான அதன் முயற்சிகள் பற்றிய அமர்வை வெற்றிகரமாக நடத்தியது.
உயிர்வாயு (பயோமீத்தேன்), பயோ டீசல், நிலையான விமான எரிபொருள் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சூர்யா நூட்டன்’ சோலார் சமையல் அடுப்பு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் உயிரி எரிபொருளின் சாதகமான நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் ஆற்றல் நுகர்வு குறைப்பு முயற்சிகள், அதன் விளைவாக கார்பன் உமிழ்வைக் குறைத்தல் ஆகியவை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெளிவு படுத்தப்பட்டது.
இந்தியன் ஓயில் கூட்டுத்தாபனமானது, இந்தியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமாகவும், எரிபொருளை சுத்தப்படுத்துவதற்கும், அதன் செயற்பாட்டிலிருந்து உமிழ்வைக் குறைப்பதற்கும் முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் 2046 ஆம் ஆண்டுக்குள் நிகர கரியமில வாயுவின் உமிழ்வை பூச்சிய நிலையை அடைவதற்கான தனது இலக்குகளை சமீபத்தில் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.