சீனாவின் கடன்பொறி குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள கருத்துக்களை சீனா வரவேற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சமீபத்தில் இலங்கை சீனாவிடம் சென்று நிதி உதவியை கோரியவேளை, சீனா அதனை மதித்ததென்றும் நிதியை பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தங்களை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
சீனா இலங்கைக்கு சில நிதி உதவிகளையும் வழங்கியது கடன் உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கியது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, கடன்பொறி என்பது மேற்குலக வார்த்தை பிரயோகம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜான் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற் செய்தியாளர் மாநாட்டில், இலங்கை வெளிவிவாகர அமைச்சரின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீனாவின் கடன்பொறி என பயன்படுத்தப்படும் சொல்லாடலை வலுவாக நிராகரிக்கும் கருத்து இதுவாகும் என்றும் இலங்கைக்கான சீனாவிற்கான உதவிகள் ஒருபோதும் அரசியல் நிபந்தனைகளை கொண்டிருக்கவில்லை என்பதை வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதலீடு மற்றும் நிதி உதவி தொடர்பான விடயங்களில் தாங்கள் எப்போதும் சுயநலத்துடன் செயற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் தாங்கள் இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உதவி வழங்கி வந்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.