அமெரிக்க நாடாளுமன்றில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக டொனால்ட் ட்ரம்பின் மீது மூன்று கிரிமினல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் குழு பரிந்துரைத்துள்ளது.
குறித்த குழு தனது விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில் கலவரம் தொடர்பாக ட்ரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டியாமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.
இதனை தவிர அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் செயற்பட்டமை, உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அமெரிக்காவை ஏமாற்ற சதி செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த குழு பரிசீலித்துவருகின்றது.
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ட்ரம்ப் தோல்வியை தழுவிய போதும் அதனை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்தாக குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய போது டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்கு புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த கலவரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகிறது. இதில் கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.