மத நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கம் நாட்டில் கட்டி எழுப்பப்பட்டுள்ள நிலையில் அதனை சீர்குலைக்க முயல்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீதலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த நபருக்கு தண்டனைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ தலதா மாளிகை இலங்கை மக்களின் கௌரவத்தை மட்டுமின்றி முழு உலகினதும் கௌரவத்தை பெற்றுள்ள முக்கிய தலமாகும்.
அந்த வகையில் அதன் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படும் வகையிலோ அவமதிப்பு ஏற்படும் வகையிலோ கருத்துக்களை வெளியிடுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது இன, மத பேதமின்றி மக்கள் மத்தியில் சிறந்த நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
அனைத்து மதங்களுமே தனது மதங்களை மதித்து செயல்படுவதுடன் அனைத்து மதங்களும் அகிம்சை வழியையே போதிக்கின்றன.
அந்த வகையில் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலம் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட எவரும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறு செயல்படும் நபருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு பௌத்த மதம் மட்டுமின்றி எந்த மதத்திற்கு எதிராகவும் எந்த மத நம்பிக்கைக்கு எதிராகவும் செயற்படும் நபருக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவை கீழ் சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.