கலண்டருக்குத் தட்டுப்பாடான மற்றொரு ஆண்டு பிறந்திருக்கிறது. பிறக்கும்போதே அது பேச்சுவார்த்தையோடுதான் பிறந்திருக்கிறது.ஆனால் முடியும்போது அது சமாதானத்தில் முடியுமா என்பது சந்தேகம்தான். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவிற்குள் சமாதானத்தை நோக்கித் திருப்பகரமான ஒரு முடிவை எடுக்கப் போவதாக அரசுத்தலைவர் அறிவித்திருக்கிறார்.தமிழ்த் தரப்பைத் திருப்திப்படுத்தாமல் அவ்வாறு திருப்பகரமான முடிவு எதையும் எடுக்க முடியாது.
பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சியின் காதலியாகி விடும்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் போது தமிழரசுக்கட்சி போராளி ஆகிவிடும் என்று எனது நண்பர் ஒருவர் கூறுவார்.ஆனால் இப்பொழுது காணப்படுவது நூதனமான ஒரு ஆட்சி. அது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியும் இல்லை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியும் இல்லை. இரண்டும் கலந்த, இரண்டுங்கெட்டான் ஆட்சியிது. தாமரை மொட்டுக்களுக்கு ஒற்றை யானை தலைமை தாங்கும் ஒரு ஆட்சி. எனவே வழமையான வாய்ப்பாட்டின்படி தமிழரசுக்கட்சி ரணிலை ஆதரிக்கவில்லை.
மேலும் தமிழரசுக் கட்சியை அடித்தளமாகக் கொண்ட கூட்டமைப்பு இம்முறை ரணிலின் ஆட்சியை ஆதரிக்கவில்லை அதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு. முதலாவது முக்கிய காரணம் கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த தோல்வி. 2015 ஆட்சி மாற்றத்தின் பின் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் பங்காளி போல செயற்பட்டது. அதன் விளைவாக கடந்த பொதுத் தேர்தலில் ஆறு ஆசனங்களை இழந்தது. தமிழ் அரசியலில் அது அனுபவித்து வந்த ஏகபோகத்தை இழந்தது.அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் அடிப்படையில் இம்முறை எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு ஒரு ஆசனமும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இரண்டு ஆசனங்களும் கிடைத்தன. தவிர வியாழேந்திரனுக்கு ஒரு ஆசனம் கிடைத்தது.இவர்கள் நால்வரும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள். கூட்டமைப்பை விட்டுச் சென்றால் , வீட்டு சின்னம் இல்லையென்றால் வெற்றி பெற முடியாது என்றிருந்த மாயையை அவர்கள் உடைத்தெறிந்து விட்டார்கள். இதனால் கூட்டமைப்பு அவமானகரமான விதத்தில் அதன் ஏகபோகத்தை இழந்துவிட்டது. எனவே அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அக்கட்சியானது கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறது.
இரண்டாவது காரணம் தென்னிலங்கையில் நிகழ்ந்த தன்னெழுச்சி போராட்டங்களை சுமந்திரன் ஆதரித்தார். சுமந்திரனும் சாணக்கியனும் போராட்டக்காரர்கள் மத்தியில் அதிகம் மதிக்கப்பட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க தன்னெழுச்சி போராட்டங்களின் கனிதான். ஆனால் அது எதிர்மறை அர்த்தத்தில். போராட்டங்களின் விளைவாகத்தான் அவருக்கு ஆட்சி கிடைத்தது.ஆனால் அவர்தான் போராட்டங்களை நசுக்கினார். இதனால் போராட்டங்களை ஆதரித்த சுமந்திரன் அதன் தக்கபூர்வ வளர்ச்சியாக ரணிலுக்கு எதிராகத் திரும்பினார்.இது இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை சவால்களுக்கு உட்படுத்தி வருகின்றன. கூட்டமைப்பிலிருந்து பிரிந்து போனவர்களோடு புதிய கூட்டுக்களை உருவாக்குவது ; இந்தியாவை அனுசரித்து நிலைப்பாடுகளை எடுப்பது போன்றவற்றின் மூலம் தமிழரசுக் கட்சியை நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன. இக்கட்சிகள் சில சமயங்களில் தீவிரமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் பொழுது தமிழரசுக் கட்சி தன்னை நிரூபிப்பதற்காக அதைவிட தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது இப்போட்டி காரணமாகவும் கூட்டமைப்பு என்ற கூட்டுக்குள் காணப்படும் கட்சிகள் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்றன.
நாலாவது காரணம், தமிழரசுக் கட்சிக்குள் தலைமைத்துவத்துக்கு போட்டி ஏற்பட்டிருக்கிறது. இப்போட்டியில் ஜெயிக்க விரும்பும் ஒருவர் எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதன்மூலம் கட்சிக்குள் தனது ஆதரவுத் தளத்தை பலப்படுத்த முயற்சிக்கலாம். எனவே தமிழரசுக் கட்சிக்குள் தமது நிலையை பலப்படுத்த முற்படும் தலைவர்கள் எதிர்ப்பு அரசியலை தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. மேற்கண்டவற்றை கூட்டிக் கழித்துப் பார்த்தால் கூட்டமைப்பின் அடித்தளக் கட்சியாகக் காணப்படும் தமிழரசுக் கட்சியானது எதிர்ப்பு அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகம் தெரிகிறது.
மேற்கண்ட நான்கு அடிப்படை காரணங்களினாலும் கூட்டமைப்பானது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு போக்கே அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்துவரும் ஒரு பின்னணியில், பேச்சுவார்த்தைகளில் அக்கட்சியானது முன்னரைப் போல ரணில் விக்கிரமசிங்கவோடு இணங்கி போவதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் குறைவு.
கடந்த 2015 இலிருந்து 2019 வரையிலுமான நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியோடு இணங்கி போனதால் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வையும் பெறவில்லை. வாக்கு வங்கியையும் பாதுகாக்க முடியவில்லை. எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமோ இல்லையோ எதிர்ப்பு அரசியலை தீவிரமாக முன்னெடுப்பதன் மூலம் குறைந்தபட்சம் வாக்கு வங்கியையாவது பாதுகாக்கலாம் என்று கூட்டமைப்பு முடிவு எடுத்திருக்கக் கூடும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிகத் தெளிவாக கூர்மையான விதங்களில் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறது. விக்னேஸ்வரனும் கூட்டமைப்போடு ஒப்பிடுகையில் சற்றுத் தீவிரமாக எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தார். அவ்வாறு எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைத்து விட்டன. எனவே தமது அரசியல் வாழ்வின் அடிப்படைப் பலமான வாக்கு வங்கியைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் சிந்தித்தால், கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவோடு முன்னரைப்போல இதயமும் இதயமும் கலக்கும் அரசியலை முன்னெடுக்க முடியாது.
இது இப்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும்?
சுமந்திரன் எதிர்ப்பு அரசியலை வெளித்தோற்றத்திற்கு முன்னெடுத்தாலும் அவர் இயல்பில் ஒரு கொழும்பு மைய அரசியல்வாதி. கொழும்பில் தன்னுடைய உயர் குழாத்து நலன்களை பாதுகாக்க விளையும் ஒருவர். எனவே பூனை எவ்வளவுதான் விரதம் இருந்தாலும் பாலைக் கண்டதும் அதற்கு ஆசைப்படுவது போல, சுமந்திரனும் ஒருகட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலுக்குள் விழுந்து விடக்கூடும் என்று ஒரு நண்பர் எச்சரித்தார்.
ஆனால் இப்போதுள்ள நிலைமைகளின்படி அவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவோடு நிபந்தனையின்றி இணங்கிச் செல்ல முடியாதபடி புதிய வளர்ச்சிகள் ஏற்பட்டுவிட்டன.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனின் கட்சி, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கொடுக்கும் அழுத்தங்கள், தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமை போட்டி போன்ற பல காரணங்களின் விளைவாக நடப்பு பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பு உடனடிக்கு அரசாங்கத்தோடு இணங்கிப் போகாது.
கடந்த புதன்கிழமை நடந்த சந்திப்பின் பின் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் அதை நிரூபிக்கின்றன. பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு முன் நிபந்தனையாக அல்லது பேச்சுவார்த்தைக்கான நல்லெண்ண சூழலை கட்டிஎழுப்பும் உள்நோக்கத்தோடு சில விடயங்களை உடனடியாக செய்து முடிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் கூட்டமைப்பு கேட்டிருந்தது. கடந்த 31 ஆம் திகதிக்குள் அவற்றை செய்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க அக்கால அவகாசத்துக்குள் முன்பு கேட்டுக்கொண்டபடி வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கவில்லை. நாளை பத்தாம் தேதி அது தொடர்பில் சில நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அவர் அச்சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் வரும் பொழுது அது தொடர்பில் சில நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாக இருந்தால் ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை வலுவிழக்கச் செய்யலாம் என்று கூட்டமைப்பு கருதக்கூடும்.ஒப்பீட்டளவில் பெரிய கட்சியான கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தொடர்பில் முன்னெச்சரிக்கையோடு கூடிய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்குமாக இருந்தால்,அது ரணில் விக்ரமசிங்க திட்டமிடும் வேகத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னேற்றுவதற்கு தடையாக இருக்கும்.அவர் அறிவித்தது போல வரும் பெப்ரவரி மாதம் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு முன் திருப்பகரமான ஒரு முடிவை அடைவது சவால் மிகுந்தது என்றே தெரிகிறது.
ரணில் விக்கிரமசிங்க கடன் வாங்குவதற்காகத்தான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. இப் பேச்சுவார்த்தைகள் சமாதானத்துக்கானவை என்பதை விடவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதை நோக்கமாகக் கொண்டவை என்பதே பொருத்தமான விளக்கமாகும். எனவே இந்தவிடயத்தில் அவசரப்பட்டு அரசாங்கத்தை பலப்படுத்தி,அதன் விளைவாக தமது வாக்கு வங்கியை இழப்பதற்கு தமிழரசுக்கட்சி தயாராக இராது. தமிழ்த் தரப்பு ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கிறது என்பதனை நன்கு கணித்துத்தான் ரணில் விக்கிரமசிங்க பேச அழைத்திருக்கிறார். எனவே இம்முறை பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பு எந்தளவுக்கு வளைந்து கொடுக்கும் என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பிலும் அதைவிட முக்கியமாக, நிச்சயமற்ற சமாதானத்துக்காக கூட்டமைப்பு தனது வாக்கு வங்கியை எதுவரை இழப்பதற்கு தயார் என்பதிலுந்தான் தங்கியிருக்கின்றது?