உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி நடத்தவிடாமல் அதனை அரசாங்கம் ஒத்திவைத்தால் மக்கள் போராட்டம் நாடெங்கும் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பு இல்லாதவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு தோல்வி ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே உளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அவர் முயற்சிக்கின்றார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலைத் திட்டமிட்ட திகதியில் நடத்தாவிடின் மக்கள் அனைவரும் வீதியில் இறங்குவார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போல் ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டுக்கு ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முப்படையினரைப் பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை அடக்கலாம் என ரணில் விக்கிரமசிங்க எண்ணுவாரானால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.