வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
நாட்டின் இரண்டாம் உயர்நிலை தலைவராக கருதப்படும் வடகொரிய தலைவரின் சகோதரி, பசிபிக் பகுதியை எங்கள் துப்பாக்கிச் சூடு வரம்பாகப் பயன்படுத்துவோம் என எச்சரித்தன் பின்னணியில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கள்கிழமை) காலை ஏவப்பட்டு ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்ததாக அந்நாட்டின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
பல ரொக்கெட் ஏவுகணைகளில் இருந்து முறையே 395 கிமீ (245 மைல்) மற்றும் 337 கிமீ (209 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளை இலக்காகக் கொண்டு இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானும் இந்த ஏவுகணைகளைக் கண்டறிந்தது, திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறியது. ஏவுகணைகள் சுமார் 100 கிமீ (62 மைல்) மற்றும் 50 கிமீ (31 மைல்) உயரத்தை அடைந்து 350 கிமீ (217 மைல்) மற்றும் 400 கிமீ (249 மைல்) வரை பயணித்து ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்தது.
இந்த சோதனைகளின் போது, விமானங்கள் அல்லது கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்த ஏவுகணை சோதனை, ஜப்பான், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது, இது அதன் அபாயகரமான அணுசக்தி தாக்குதல் திறனை வலுப்படுத்தும் நடவடிக்கை என்று அரசு ஊடகம் விபரித்துள்ளது.