சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி.வடக்கில் போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.
இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நாகரீகம் அற்ற செயலை மலையக சமூக ஆய்வு மையம் மற்றும் மலையக தமிழர் பண்பாட்டுப் பேரவை என்பன வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துன்புற்றிருக்கும் மக்களின் வேதனையோடு தாங்களும் நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அராங்கம் இந்து மக்களிடத்திலும், தமிழ் மக்களிடத்தும் இச்செயல் தொடர்பாக மன்னிப்பு கோருவதோடு அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை முற்றாக அங்கிருந்து அகற்றி அங்கு இந்து மக்களின் சுதந்திர வழிபாட்டுக்கும் இடம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.