ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 9, 10ஆம் திகதிகளில் உச்சி மாநாட்டை டில்லியில் நடத்துவதற்கான ஆயத்தங்களை துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், இந்தியா உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, இந்தியா தனது அனைத்து மாநிலங்களையும் மேம்படுத்தும் வகையில் ஜி20நாடுகளை மையப்படுத்தி பல்வேறு தொனிப்பொருட்களிலான வெவ்வேறு கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக, நாடு முழுவதும் ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற கருப்பொருளுடன் நாடு முழுவதும் 200 நிகழ்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி ஜி20 இலச்சினையை பொதுமக்களிடம் கொண்டு செல்லவதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் ஜி20 மாநாடு குறித்து கட்டுரை போட்டி, விவாத மேடை, பேச்சு போட்டிகள், சுய உதவி குழுக்களுக்கு கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் பலவும் நடத்தவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைவிடவும், தலைமையேற்றுள்ள இந்தியாவுக்கு, சமமான மற்றும் நிலையான வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடு, காலநிலை நிதி உதவி, உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு என்பன இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
முன்னதாக ஜி-20 கல்விக்குழுவின் முதலாவது கூட்டம் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ எனும் தொனிப்பொருளில் கடந்த ஜனவரியில் ஆரம்பமாகியிருந்தது.
இதனைத்தொடர்ந்து, நிதி அமைச்சர்களின் மாநாடு, வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு, இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு என்பன நடைபெற்றிருந்தன.
புதுச்சேரி, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விசேட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு நகர அழகுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலே உறுப்பு நாடுகளிடையே நிலவும் பிரச்சினைகளை சுமுகமாக முடித்து, கூட்டமைப்பு நாடுகளை ஒற்றுமையாக வைத்து, வழிநடத்துவதும் இந்தியாவின் பொறுப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இதையெல்லாம் இந்தியா திறம்பட கையாள்வதற்கான திட்டமிடல்களை முன்னெடுத்துள்ளமை விசேட அம்சமாகும்.
குறிப்பாக, ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அளித்துள்ள பேட்டியொன்றில், அவரிடம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்பது பரிசீலிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பட்டது.
அதன்போது, இந்தியாவின் அழைப்பை நிராகரிக்க முடியாது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஜி20 வடிவத்தில் ரஷ்யா அதன் முழு பங்கேற்பை தொடர்கிறது. நாங்கள் அதை தொடர விரும்புகிறோம் என்றார்.
இந்தக்கருத்தானது பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான குழு பங்கேற்றது 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் புடின் மெய்நிகர் மூலம் பங்கேற்றார்.
இவ்வாறான நிலையில் இந்தியப் பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டி வரும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிகபட்சடமாக குறித்த மாநாட்டில் பங்கேற்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.
அவ்வாறு அவர் பங்கேற்பாராக இருந்தால், சொற்ப காலத்திற்கு பின்னர் குறித்த மாநாட்டில் நேரடியாக புடினை கலந்து கொள்ளச் செய்த பெருமை இந்தியாவைச் சாரும்.
அதுமட்டுமன்றி, உக்ரேன் மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய கூட்டணிக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அந்தத் தலைவர்கள் அமரும் மேடையில் புடினையும் அழைத்து வந்து அமரச் செய்த பெருமையும் இந்தியாவையே சேரும்.
அவ்வாறு புடின் அழைக்கப்பட்டு பிரசன்னமாகும் பட்சத்தில், அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் புடின் நேரடியாக பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக இருக்கும்.
ஏற்கனவே உக்ரேன், ரஷ்ய போரில் நடுநிலைமை வகிக்கும் இந்தியாவை சமாதான பேச்சுக்களில் பங்கேற்குமாறு பகிரங்க அழைப்புக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை இந்தியா தனது சொந்த மண்ணிலேயே வைத்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பு கிட்டும். அதுவெற்றிபெறுவதற்குமான சூழலும் தோற்றம் பெறும்.
அவ்விதமான நிலைமையொன்று ஏற்படுமாக இருந்தால் ஜி20நாடுகளின் தலைமையை ஏற்று இந்தியா செய்துள்ள மிகப்பெரும் உலக சாதனையாகவே வரலாற்றில் பதிவாகும்.