மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்த தாம் தேவை ஏற்படும் போது பலமிக்க சக்தியாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள நான் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்படவில்லை. நாம் எங்கே தவறு செய்தோம் என்பது எமக்கு தெரிகின்றது அவ்வாறான தவறான தீர்மானங்களை தற்போது திருத்திக் கொண்டுள்ளோம்.
நாடு பாரிய சவால்களை எதிர்கொண்ட வேளையிலேயே ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்றேன். சவால்களை கண்டு, நானும் எனது தரப்பினரும் ஒருபோதும் பின்வாங்கவில்லை. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் தொழிற்சங்கத்தினரை தவறாக வழிநடத்துகிறார்கள். எம்மை திருடர், திருடர் என விமர்சிப்பவர்களை சவால்களை பொறுப்பேற்குமாறு பல தடவைகள் அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் பின்வாங்கினார்கள்.
தற்போது அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாத காரணத்தினால் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இவ்வாறே பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம்.
மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள். தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.