வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பக்தர்களினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அதற்கிணங்க, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நேரில் சோதனை செய்வதற்கும் மேலதிக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வெசாக் விடுமுறை காலம் முழுவதும் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவிலியன்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வெசாக்கை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று முதல் மே மாதம் 6 ஆம் திகதி வரை மூடப்படுகிறது.
சில்லறை விற்பனை நிலையங்கள் உட்பட அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களில் மதுக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை மூடாமல் இருந்தால் அல்லது உரிம விதிமுறைகளை மீறினால் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அனைத்து கலால் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளை மற்றும் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத பிரதிப் பொதுமுகாமையாளர் இதிபொலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று முதல் விசேட பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கும் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கும் இந்த பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.
மேலும், வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, நாளையும் நாளை மறுதினமும் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப்பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களை ஒருவருக்கு போதுமான அளவில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் சட்டதிட்டங்களுக்கு அமைய உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உறவினர்களைப் பார்வையிடும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு நகரில் 6 வெசாக் வலயங்களும் 125 பதிவு செய்யப்பட்ட தான சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை, புத்தசாசன அமைச்சு, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து கொழும்பு நகரம் மற்றும் புத்தி ரஷ்மி வெசாக் வலயம், வலுகாராமய வெசாக் வலயம் முழுவதும் விசேட வெசாக் பூஜோத்சவ நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளன.
பௌத்தலோக மாவத்தை வெசாக் வலயம்., புரஹல வெசாக் வலயம், துறைமுக அதிகாரசபையைச் சுற்றியுள்ள வெசாக் வலயம் மற்றும் சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள வெசாக் வலயம் என 6 வெசாக் வலயங்கள் கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, காலி முகத்திடல் பகுதியில் மாபெரும் வெசாக் வலயமும், தான சாலையும் அமைக்கப்பட்டுள்ளதோடு, அனைத்து வெசாக் வலயங்களிலும் பொதுமக்களுக்கு குடிநீரை வழங்குவதற்காக தேசிய நீர் வழங்கல் சபையுடன் இணைந்து நீர்த்தாங்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.