அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டம் அரசியல் ரீதியில் பின்தள்ளப்பட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கியது.
அதற்கு மூல காரணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்மக்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது, அவர்களைக் கைவிடக்கூடாது.
தமிழ் மக்கள் தமக்கான பிரதிநிதியில்லாமல் அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏற்ற தலைமை இல்லாமல் அநாதையாக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஆகும்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஊடக ஒலி, ஒளி பரப்பு சட்டமூலம் கொண்டுவரப்படவிருக்கின்றது. இந்த உத்தேச சட்டம் கொண்டு வரப்பட்டால் நாட்டிலுள்ள ஊடக குரல் நசுக்கப்படுகின்ற நிலை காணப்படும்.
உண்மையான விடயங்களை நாங்கள் வெளிக்கொண்டு வரமுடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
இவ்வாறான விடயங்களை அரசு மேற்கொள்ளும்போது கடுமையாகப் பாதிப்புறுபவர்கள் தமிழ் மக்களே வேறு யாருமல்லர் என்பதை நான் இந்த இடத்திலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.