கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட தூய்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவரும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான டொக்டர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
இதன்போது மக்கள் வீட்டிலேயே தங்கி டெங்கு ஒழிப்புக் குழுவிற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு லார்வா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 47,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.