தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த யோசனைகளை இதுவரையில் நாம் பார்க்கவில்லை. ஆனால் இதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு எமது ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு நிச்சயம் தேவை.
தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் திருப்தியடைந்தால் மாத்திரமே எம்மால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.
நாம் இது தொடர்பில் ஆழமாக மதிப்பாய்வு செய்து பல மாற்று திட்டங்களை முன்வைத்துள்ளோம். ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்காது தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது எவ்வாறு என்பதை நாம் அறிவோம்.
எனவே இவ்விடயம் தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த யோசனைகள் சாதாரண மக்களுக்கு எதிர்மறையானதாகக் காணப்பட்டால், அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எமக்கு மக்கள் சார்பில் முன்னிற்க வேண்டியேற்படும்.
காரணம் எதிர்க்கட்சியின் பிரதான கடமை மக்களுக்காக முன்னிற்பதாகும். இதிலிருந்து தப்பிச் செல்ல நாம் எண்ணவில்லை.
ஊழியர் சேமலாப நிதியத்துக்காகவும், நிலையான பண வைப்பாளர்களுக்காகவும் , சாதாரண மக்களுக்காகவும் நாம் போராடுவோம்.
உண்மையில் தேசிய கடன் மறுசீரமைப்பை முறையாக நடைமுறைப்படுத்தினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரை பாதுகாக்க முடியும்.
எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு இதனை சரியான பாதையில் எம்மால் கொண்டு செல்ல முடியும். அத்தோடு இதனை சரியான முறையில் முன்னெடுத்துச் சென்றால் குறுகிய காலத்துக்குள் நாட்டைக் கட்டியெழுப்பவும் முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.