அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாட்டு பயணங்களையோ வெளிப் பிரதேசங்களுக்கான பயணங்களையோ மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பையடுத்து இம்மாதம் 30, ஜூலை முதலாம் மற்றும் 2 ஆம் திகதிகளில் ஆளுந்தரப்பு எம்.பி.க்களை கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அறிவித்தல் வெளியிடப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டாலும், இது தொடர்பாக நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிபந்தனைகள் குறித்த மீளாய்வு எதிர்வரும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து நிதி அமைச்சின் சார்பில் வழங்கப்பட வேண்டிய தெளிவுபடுத்தல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன சார்பில் அமைச்சுப்பதவிகளுக்கான கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதியிடமிருந்து இதற்கான பதில் வழங்கப்படாத நிலையில், இது குறித்தும் புதனன்று இடம்பெறவுள்ள சந்திப்பில் அவதானம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.